வடகிழக்கு பருவமழை வருகிற 23ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை விடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மராட்டியம், தெலங்கானாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் விலகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து தென்மேற்கு பருவமழை விலகியதும், வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்நிலையில், வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது வானிலை மையம்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது