மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பிபிசியின் ஆவணப்படத்தை வெளியிட தடை

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடையை மீறி காங்கிரஸ் கட்சி நேற்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டது. 2002ல் குஜராத்தில் கலவரம் நடந்தது. அப்போது அந்த மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். இந்த கலவரம் குறித்து, பிரிட்டிஷ் அரசு ஊடகமான பிபிசி, 2 பாகங்களாக ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டது.

“இந்தியா-மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. சமூக வலைதளங்களிலும், பொது இடங்களிலும் பிபிசியின் படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், ஆவணப்படம் திரையிடப்படுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி அன்மையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தாலும், நாட்டின் உள்விவகாரங்களில் பிபிசி தலையிடக் கூடாது என பகிரங்கமாக எதிர்ப்பை பதிவு செய்தார்.