அனுமதி பத்திரம் இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளை கண்டறிய நடவடிக்கை

கொழும்பு: போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு... அனுமதிப் பத்திரம் இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளைக் கண்டறியும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து கொழும்பில் இருந்து மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளுக்கு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கிய நான்கு பேருந்துகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுதொடர்பான சோதனை நடவடிக்கைகளுக்காக 4 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மன்னம்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தைத் தொடர்ந்து, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்காலிக அனுமதிப்பத்திரத்தில் இயங்கிய அனைத்து பேருந்துகளையும் போக்குவரத்தில் இருந்து அகற்றுவதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையைப் பாராட்டுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.