சந்திரபாபு நாயுடுவை சந்தித்த நடிகர் பவன்கல்யாண்; ஆந்திரா அரசியலில் பரபரப்பு

ஆந்திரா: அரசியல் களம் பரபரப்பு... சந்திரபாபு நாயுடுவை நடிகர் பவன் கல்யாண் சந்தித்துப் பேசினார். ஜனநாயகத்தைக் காக்க அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்படப்போவதாக இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். இது அங்கு கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.அங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அங்கு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன்கல்யாண், எதிர்க்கட்சிகள் ஓட்டு 2024 தேர்தலில் பிளவுபடாமல் இருப்பதை உறுதி செய்வேன் என்று ஏற்கனவே சூளுரைத்திருக்கிறபோது, இந்தக் கேள்வி வலுப்பெற்றுள்ளது.

குறிப்பாக ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சி கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஜனசேனா கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். முன்பு தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா ஆகிய முக்கட்சிகளின் கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சிதான் தலைமை வகித்தது என்பது நினைவுகூரத்க்கது.

2018-ம் ஆண்டு முதல் இரு கட்சிகளுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தெலுங்கு தேசம் கட்சி தனித்திருக்கிறது. ஜனசேனா இந்தக் கட்சியுடன் நெருங்கி வந்தாலும், பா.ஜ.க., தெலுங்குதேசத்துடன் கரம் கோர்ப்பதில் விருப்பம் காட்டவில்லை. சந்திரபாபு நாயுடுவுடன் பவன்கல்யாண் சந்திப்பு இந்த நிலையில் ஐதராபாத்தில் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்கு பவன் கல்யாண் வந்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு தலைவர்களும் முறைப்படி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.