பஞ்சாபின் மாநில அடையாள சின்னம் ஆக நடிகர் சோனு சூட் நியமனம்

பஞ்சாபின் மாநில அடையாள சின்னம் ஆக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் சோனு சூட். பஞ்சாபின் மொகா மாவட்டத்தில் பிறந்தவரான சோனு, நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்புகளை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் முடங்கிய புலம்பெயர்ந்தோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு பெரும் உதவி புரிந்தவர்.

இதனால் தேசிய அளவில் அவரது புகழ் பரவியது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிக்கி கொண்ட புலம்பெயர்ந்தோருக்கு வாகன வசதிகளை செய்து கொடுத்து மனிதநேயத்துடன் பணியாற்றியது, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்த சூழலில், பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூ இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய பரிந்துரையில், சோனுவை பஞ்சாபின் மாநில அடையாள சின்னம் ஆக நியமிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.