அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு .. இன்று காலை 9 மணிக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பின் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. ஒற்றை தலைமை நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.

மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆட்சியை பொறுத்தவரை, முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்தர்கள்.ஆனால் தற்போது ஒற்றை தலைமை கோரி கட்சியில் பல குழப்பங்கள் ஏற்பட்டன.

இதனால் கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற்றது . ஆனால், இக்கூட்டத்தில் ஒற்றை தலைமை கொண்டுவர முடியாத நிலையில், நிறைவேற்றப்படுவதற்காக தயாராக இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டதுடன், அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் ஜூலை 11-ந் தேதி (இன்று) கூடும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது.
இந்த தீர்ப்பை பொறுத்தே அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? இல்லையா? என்பது தெரியவரும். அதன்பின்னர் தான் அடுத்தக்கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.