வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவின்படி 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் இணை கமிஷனர்கள் மதுசுதன் ரெட்டி, சங்கர்லால் குமாவத், வட்டார துணை கமிஷனர்கள் பி.ஆகாஷ், பி.என்.ஸ்ரீதர், ஆல்பி ஜான் வர்கீஷ், 15 மண்டலங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமை என்ஜினீயர், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது கமிஷனர் கோ.பிரகாஷ் பேசியதாவது:- பருவமழையின் போது மழைநீரை அகற்ற மோட்டார் பம்பு செட்டுகள், நீர்நிலைகள் தூர்வார நவீன எந்திரங்கள், பொது சமையலறைகள், நிவாரண மையங்கள் உள்ளிட்டவை தயார்நிலையில் உள்ளன.

மேலும் தொடர்புடைய சேவைத்துறையான காவல்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை, ரெயில்வே துறை, மெட்ரோ ரெயில், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புத்துறை ஆகியவற்றுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இதுதவிர கூவம், அடையாறு உள்ளிட்ட 30 நீர்வரத்து கால்வாய்களின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு, அங்கு வசித்து வந்த குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.

பருவமழையை முன்னிட்டு அந்தந்த மண்டலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மண்டல கண்காணிப்பு அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் நேரடியாக சென்று ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.