முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது அதிமுகவினர் தாக்குதல்?

சென்னை: முன்னாள் அமைச்சர் கார் மீது தாக்குதல்... அதிமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வருகின்ற ஜூன் 23ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறக்கூடிய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து மூத்த நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செம்மலை மற்றும் வளர்மதி உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் தலைவராக இருப்பார் என்ற தகவலை அடுத்து அவருடைய ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக அதிமுக வாயிலில் கூடி இருந்தனர். இந்த சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து விட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புறப்படும்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் துரோகி, கட்சியை அழித்தவனே என்று ஆபாச வார்த்தைகளால் கூறியதாக தெரிகிறது.
அதோடு அவருடைய காரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற தாக்குதலில் ஈடுபடக் கூடாது என ஆதரவாளர்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தினர். இபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.