அதிமுக பொதுக்குழு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

சென்னை: கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், கே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ஓபிஎஸ் தரப்பும் வாதம் முடிவடைந்துவிட்டது. அதன் பின்னர் ஒரு மாத கோடை விடுமுறைக்குப் பின் நேற்று ( ஜூன் 8 ) நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் தொடங்கியது. அதிலும் குறிப்பாக அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். அவர், கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்றில்லை. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

மேலும் கட்சி செயல்பாடு தொடர்ந்து முடங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் நியமனத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் ஓபிஎஸ் எந்தவித உரிமையும் கோர முடியாது. ஒற்றைத் தலைமையை மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் கட்சியின் பழைய நிலை மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. கட்சி விதிகளின்படியே, விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, அதில் எந்த தவறும் இல்லை.

பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் தலைவராக, முதல்வராக இருந்திருக்கலாம். தலைவர்கள் வரலாம், போகலாம். மக்களின் விருப்பப்படிதான் கட்சி தொடர வேண்டும். அனைத்து நடவடிக்கைகளும் கட்சி நலன்கருதியே எடுக்கப்பட்டன. நிர்வாகிகளை நியமித்து இணையாக கட்சி நடத்தும் நபர், பதவிப்பசி காரணமாகவே இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்” என வாதங்களை முன்வைத்தார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களுக்காக வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது. எனவே அதன்படி இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.