அதிமுக தலைமைக்கழக கலவரம்... ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்ப முடிவு

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன்?... அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் குறித்து விசாரணையை துவக்கியுள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு 'சம்மன்' அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 11ல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலக வளாகத்தில், பன்னீர்செல்வம் - பழனிசாமி ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து, அ.தி.மு.க., - எம்.பி., சண்முகம் புகார் அளித்தார். அலுவலகத்தில் இருந்து, சொத்து ஆவணங்கள், கணினிகள் என, ஏராளமான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிஇருந்தார்.

ராயப்பேட்டை போலீசார், பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் மீது, திருட்டு உட்பட, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரியாக, டி.எஸ்.பி., வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கீழ், இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா, ரேணுகா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்த குழுவினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இதை தொடர்ந்து பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு விரைவில் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.