விமானப் பயணக்கட்டண உயர்வு எங்கள் கைகளில் எதுவுமில்லை

புதுடில்லி: எங்கள் கைகளில் எதுவுமில்லை... விமானப் பயணக்கட்டண உயர்வு எங்கள் கைகளில் எதுவுமில்லை என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு உள் நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், மலிவான விமானப் பயணங்கள் எல்லாம் உலகமய பொருளாதாரப் பாதையின் பயன் என்று ஆட்சியாளர்கள் பேசிய காலம் உண்டு. இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது.


இதுகுறித்த கேள்வி ஒன்றை நாடாளுமன்றத்தில் நான் எழுப்பி இருந்தேன். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விமானக் கட்டணங்கள் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓராண்டில் பிரபலமான தடங்களில் 50 சதவீதம் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

இதை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? கட்டணங்களை கட்டுப்படுத்த அரசிடம் ஏதாவது அதிகாரம் தக்க வைக்கப்பட்டுள்ளதா? அரசின் கைகளில் இருந்த ஒரே விமான நிறுவனமான ஏர் இந்தியா, டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டதால் அரசிடம் இருந்த விலைக் கடிவாளம் கை நழுவிப் போய் விட்டதா? மலிவு விமானப் பயணத்தை உறுதி செய்ய அரசின் தலையீடுகள் என்ன? என்ற கேள்விகளை எழுப்பி இருந்தேன்.

இதற்கு பதிலளித்துள்ள உள் நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங், விமானக் கட்டணங்களை அரசு நிர்ணயிப்பதும் இல்லை. கட்டுப்படுத்துவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


மலிவு விலை விமானப் பயணங்கள் பொருளாதார சீர் திருத்தங்களின் வெற்றி என்று தம்பட்டம் அடித்த அரசாங்கம் இரண்டு மாதங்களில் 20 சதவீதம் உயர்வு, ஓராண்டில் 50 சதவீதம் உயர்வு ஏன் என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.