தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும்...தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு

சென்னை: கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதற்கு இடையே, தமிழகம் முழுவதும் இன்று 91% தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 89%, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95%, சி.பி.எஸ்.இ பள்ளிகள் 86% இயங்கியுள்ளதாகவும், மாவட்டம் வாரியாக இன்று இயங்கிய தனியார் பள்ளிகள் விவரங்கள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் 100% அளவிற்கு பள்ளிகள் இயங்கி வருகின்றன எனவும் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளும் 100% இயங்கியது என்றும், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், நாகை, அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100% பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.