வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க வீரர் கைது செய்யப்பட்டாராம்

சியோல்: வடகொரியாவுக்குள் ஊடுருவிய அமெரிக்க ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே சுமூகமான உறவு இல்லை. இதன் காரணமாக இரு நாடுகளும் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுகின்றன.

தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு செயல்படுகிறது. இதனையடுத்து, கூட்டுப் போர் பயிற்சி மற்றும் ராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக அமெரிக்க வீரர்கள் தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள்.

இந்நிலையில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் வடகொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இரு நாடுகளையும் பிரிக்கும் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள பன்முன்ஜாம் கிராமம் வழியாக வடகொரியா சென்றார். அவரை வடகொரிய வீரர்கள் கைது செய்தனர். ராணுவ வீரரை மீட்க அமெரிக்க ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.