எத்தியோப்பியாவில் 114 வயதான மனிதர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டார்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது. குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. பெரும்பாலும் முதியவர்களைத்தான் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்குகிறது.

இந்நிலையில் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் 114 வயதான அபா திலாகுன் வேர்டேமிக்கேல் என்ற மனிதர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டுள்ளார். இது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன் தலைநகர் அடீஸ் அபாபா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

அதன்பின் உடனே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ஒரு வார காலத்துக்கு மேலாக ஆக்சிஜன் செலுத்தி வந்த நிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளார். 14 நாட்களுக்கு பிறகு இப்போது வீடு திரும்பியுள்ளார். அவருக்கு 114 வயது என்பதை உறுதிப்படுத்த பிறப்பு சான்றிதழ் இல்லை. ஆனால் அவருக்கு நிச்சயம் 109 வயது இருக்கும் என டாக்டர்கள் கணித்துள்ளனர்.

இவர் 1935-1941 இடையே நடந்த இத்தாலி ஆக்கிரமிப்பு, 1974-ம் ஆண்டு பேரரசர் ஹெயில் செலாசி பதவி நீக்கம், 1991-ல் மார்க்சிஸ்டு டெர்க் ஆட்சியின் வீழ்ச்சி என பல வரலாற்று நிகழ்வுகளை கண்டுள்ளார். தற்போது கொரோனாவையும் சந்தித்து மீண்டுள்ளார். இந்நிலையில் அவர் தனது பேரன் வீட்டில், அவரது பராமரிப்பில் உள்ளார்.