அர்ஜென்டினா துணை அதிபரை கொலை செய்ய நடந்த முயற்சியால் பரபரப்பு

அர்ஜென்டினா: அர்ஜென்டினா துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டாஸ் கிர்ச்னரை கொல்ல முயற்சி நடந்ததாக அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட வந்தாகவும், ஆனால் திடீரென துப்பாக்கி பழுதானதால் கிறிஸ்டினா உயிர் பிழைத்தார் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது வெளிப்படையான படுகொலை முயற்சி என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சியில், கிறிஸ்டினா பெர்னாண்டாஸ் கிர்ச்னர் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆதரவாளர்களிடம் பேசுவதற்கு தனது வாகனத்திலிருந்து இறங்குவதைக் காணலாம். ஆதரவாளர்களால் சூழப்பட்டு இருந்த நிலையில், அப்போது ஒரு நபர் திடீரென துப்பாக்கி போன்ற ஒன்றை எடுத்து அவரை நோக்கி சுடுவது போல தெரிகிறது. எனினும், துணை அதிபர் இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்தார். அந்த நபர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

ஆனால் சம்பவம் நடந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, அந்த இடத்தில் இருந்த துணை அதிபரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அர்ஜென்டினா பாதுகாப்பு அமைச்சர் அனிபால் பெர்னாண்டஸ், 'சி5என்' செய்தி சேனலிடம், ஆயுதத்தை வைத்திருந்த நபர் துணை ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இதுதொடர்பான மேலதிக விவரங்களை வெளியிட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா நாட்டின் அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸின் அரசாங்கத்தின் அமைச்சர்கள், துணை ஜனாதிபதியின் கொலை முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாக ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டனர்.


அதில் இன்று இரவு நடந்தது மிகவும் தீவிரமான சம்பவம் மற்றும் ஜனநாயகம் மற்றும் அதன் சட்டத்தின் ஆட்சிக்கு இது அச்சுறுத்தல் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.