ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை ரோபோ உதவியுடன் மீட்க முயற்சி

மத்திய பிரதேசம்: ரோபோ உதவியுடன் மீட்கும் முயற்சி... மத்தியப்பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 2 நாட்களுக்கு முன் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையை ரோபோ உதவியுடன் மீட்கும் முயற்சி தொடங்கி உள்ளது.

முங்காவல்லி என்ற கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் அந்த குழந்தை விழுந்தது. முதலில் 30 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சரிந்து, தற்போது சுமார் 100 அடி ஆழத்தில் தொங்கிக் கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளை வழியாக தொடர்ந்து பிராணவாயு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குழந்தையை மீட்க ரோபோவின் துணையை அதிகாரிகள் நாடியுள்ளனர். இதற்காக குஜராத்தில் இருந்து 3 பேர் அடங்கிய ரோபோட்டிக் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

குழந்தையின் தற்போதைய உடல் நிலை பற்றி அறிவதற்காக ஆழ்துளைக்குள் ரோபோவை மீட்புக் குழுவினர் இறக்கி உள்ளனர். அது சேகரித்துக் கொண்டு வரும் தகவல்களின் அடிப்படையில் குழந்தையை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.