கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள் அதிகளவு குணமடைந்து வீடுகளுக்கு திரும்புகின்றனர் என்ற தகவல் ஆசுவாசம் அடைய வைத்ததுள்ளது.

கொரோனா தொற்றுக்காக 3 லட்சத்து 58 ஆயிரத்து 692 பேர் மட்டுமே இப்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 53 ஆயிரத்து 750 ஆக அதிகரித்து உள்ளதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குணமடைவோருக்கும் சிகிச்சை பெறுவோருக்குமான வித்தியாசம் படிப்படியாக அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த தொற்று எண்ணிக்கையில் 86 சதவிகிதம் பேர் 10 மாநிலங்களுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம் 20 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் தேசிய சராசரியான 63 சதவிகிதத்தை விட அதிகம் என்றும் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 17,994 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதுவரை ஒரு கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 742 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது பத்துலட்சம் பேருக்கு 9734.6 பேர் என்ற விகிதத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.