தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தோனேசியா சென்ற விமானம் சென்னையில் தரையிறங்கியது

சென்னை: அவசரமாக தரையிறங்கிய விமானம்... கத்தார் நாட்டில் இருந்து இந்தோனேசியா சென்று கொண்டிருந்த விமானம், தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கத்தார் நாட்டில் இருந்து இந்தோனேசியாவுக்கு 368 பயணிகளுடன் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பிற்பகல் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது. நடுவானில் 39,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கத்தார் ஏர்லைன் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய விமான பைலட் மற்றும் பொறியாளர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் அனுமதி கேட்கப்பட்டு விமானமானது அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பின்னர், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக கத்தார் ஏர்லைன் விமானம் இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றது. விமானியின் துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 368 பயணிகள் உயிர் தப்பினர். நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.