பிரான்சில் கிரேக்க பாதிரியார் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிசூடு

பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயத்தை மூடும் பணியில் பாதிரியார் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த நபர் பாதிரியாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அடிவயிற்றில் 2 குண்டுகள் பாய்ந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிரியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்ட நபரை நேரில் பார்த்தவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கடந்த 29-ம் தேதி பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் 3 பேர் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் பிரான்ஸில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கடந்த 2-ஆம் தேதி வரலாற்று ஆசிரியர் முஹம்மது நபியின் கேலி சித்திரத்தை வெளியிட்டதால், கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின், பிரான்ஸில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் கேலி சித்திரத்தை வெளியிடுவதை கைவிடப்போவதில்லை என அந்நாட்டு அதிபர் கூறியதற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.