பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் புதிய நடைமுறையை பின்பற்ற உள்ளதாக அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து இதற்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் அக்டோபர் 18ம் தேதி வரை நடைபெறும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பொறியியல்‌ கல்லூரிகளின்‌ முதல்வர்கள்‌, தமிழகத்தில்‌ உள்ள 110 பொறியியல்‌ சேர்க்கை சேவை மைய பணியாளர்கள்‌ ஆகியோருக்கு கலந்தாய்வுக்கான பயிற்சிகளை தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை செயலாளர்‌ வழங்கியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வுக்கு பிறகும் கல்லூரிகளில் அதிகமான காலிப்பணியிடங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என நடப்பு ஆண்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. அதன்படி, ஒரு மாணவர்‌ கல்லூரியை தேர்வு செய்‌த பின்பு அந்த மாணவர் தேர்வு செய்த கல்லூரியில் 7 நாள்களுக்குள் கல்லூரியில்‌ சேர வேண்டும். அவ்வாறு சேரவில்லை எனில் மீண்டும்‌ அந்த காலியிடம் 2ம்‌ கட்ட கலந்தாய்வின்போது நிரப்‌பப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டு முதல் ரூ.5000 பதிவுக்‌ கட்டணம்‌ ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட கல்லூரிக்கு சென்று அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி தங்களின் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.