டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் தேர்வு தேதி அறிவிப்பு

பல்வேறு பதவிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற நாட்களில் நேர்காணல் தேர்வு நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருந்த அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது அதற்கான பணிகளை டி.என்.பி.எஸ்.சி. தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி நடந்த குரூப்-2 பதவிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 19-ந்தேதியும், கடந்த ஆண்டு மே 11-ந்தேதி நடந்த தமிழ்நாடு கைத்தறி-ஜவுளிகள் சார்நிலைப்பணி, கைத்தறிகள்-ஜவுளி துறைக்கு முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 16-ந்தேதியும் நேர்காணல் தேர்வு நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலான 3 நாட்களில் நடந்த பள்ளி கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 19-ந்தேதியும் நேர்காணல் தேர்வு நடைபெற இருக்கிறது.

அதேபோல கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு பொதுப்பணி, மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தில் திட்ட அதிகாரி மற்றும் தமிழ்நாடு சிறை பணி உளவியலாளர் பதவி, சிறை சார்நிலை பணி அதிகாரி பதவி, பொது சார்நிலை பணி, தொல்லியல் அலுவலர் பதவி உள்ளிட்ட பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வருகிற 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தங்களது சான்றிதழ்களை அருகேயுள்ள இ-சேவை மையம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.