100 சதவீத ஊழியர்களுடன் வங்கிகள் இயங்கும் என்று அறிவிப்பு

100 சதவீத ஊழியர்களுடன் வங்கிகள் இயங்கும்... பேருந்து சேவை தொடங்கப்பட்டதை அடுத்து, வங்கிகள் இனி 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகள் அனைத்தும் 100சதவீத ஊழியர்களுடன் செயல்படவேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும், மாநில வங்கியாளர்கள் குழு கடந்த மாதம் உத்தரவிட்டது. பொதுப் போக்குவரத்து தொடங்காத நிலையில், வங்கிகளில் 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வருவது சிரமம் என ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வங்கிகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டன.

இந்நிலையில் நேற்று முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வரும் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து, வங்கிகள் மீண்டும் 100 சதவீத பணியாளர்களுடன் நேற்று முதல் செயல்பட மாநில வங்கியாளர் குழு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமுல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கும் விலக்கிக் கொள்ளப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் சில வங்கிக் கிளைகள் இனிமேல் வழக்கம்போல அன்றைய தினம் செயல்படும். அதேசமயம் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வங்கிக் கிளைகள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டியதில்லை. இதுதொடர்பாக, ஊழியர்கள் தங்கள் உயர் அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என மாநில வங்கியாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.மொகந்தா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.