கோவாக்சின் தடுப்பூசி 60 சதவீதம் திறன் கொண்டதாக இருக்கும் என அறிவிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பலநாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியின் 2 கட்ட பரிசோதனைகளிளும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் தற்போது 3-ம் கட்ட பரிசோதனை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் 26 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது, கோவாக்சின் தடுப்பூசி குறைந்தபட்சம் 60 சதவீதம் செயல் திறன் கொண்டதாக இருக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.


இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவிக்கையில், சுவாசம் தொடர்பான தடுப்பூசிகள் 50 சதவீதம் வெற்றி அடைந்தாலே அதற்கு உலக சுகாதார மையம், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவை அனுமதி வழங்குவதாகவும், கொரோனா தடுப்பூசியை 60 சதவீதம் வெற்றி அடைய வைக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, அமெரிக்க மருந்து நிறுவனங்களான பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 90 சதவீத செயல்திறனும், மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 94.5 சதவீத செயல்திறனும் கொண்டதாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன.