பொறியியல் கலந்தாய்வு வரும் ஆக.2ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023- 24 ம் கல்வியாண்டில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க அடுத்த மாதம் 4-ந்தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கான உத்தேச தேதி பட்டியலில், முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2 - ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையடுத்து பொது பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் செப்டம்பர் 24- ம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ரேண்டம் எண் ஜூன் ஏழாம் தேதியும் , தரவரிசை பட்டியல் ஜூலை 12-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.