இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் செய்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குர்திஷ் ஆதரவு குழுக்கள், பிரக்சிட் எதிர்ப்பு குழுக்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர். இவர்கள் குறைவான பங்கேற்பாளர்களாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் நடைபெற்று கொண்டிருந்தாலும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தார்.

பாராளுமன்றம் வந்திருந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்குள்ள பணிகளை முடித்துக்கொண்டு, பின்னர் டவுன் ஸ்டிரிட்டில் உள்ள தனது பிரதமர் அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டார். பிரதமர் ஜான்சனின் கார் பாராளுமன்றத்தை விட்டு வெளியே வந்த சமயத்தில் போராட்டக்காரர்களில் ஒருவர் பிரதமரின் காரை வேகமாக சென்று இடைமறித்தார்.

இதனால் பிரதமரின் கார் டிரைவர் வேகமாக பிரேக்கை மிதித்து காரை நிறுத்தினார். அந்த நேரத்தில் பின்னால் வந்த பாதுகாப்பு படையினரின் வாகனம் எதிர்பாராத விதமாக பிரதமரின் கார் மீது வேகமாக மோதியது. இதனால் ஜான்சன் பயணித்த காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. இருப்பினும் அவர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் ஏற்படாமல் உயிர் பிழைத்தார்.

அதன்பின், பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து பிரதமர் சென்ற காரை இடைமறித்த போராட்டக்காரரை பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் சென்ற காரை இடைமறித்து விபத்து ஏற்பட காரணமாக இருந்ததால் அந்த போராட்டக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.