டெல்லியில் கற்பழிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்

கடந்த 4-ந்தேதி டெல்லி பாஸ்சிம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். முகம், தலை என உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பின் சிறுமி மீட்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அன்று இரவிலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது உயிர் காக்கும் கருவிகளுடன் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் என அனைத்துக்கட்சியினரும், அமைப்புகளும் அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதனையறிந்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சிறுமியை கற்பழித்த குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அறிவித்தார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் சிறுமியை சந்தித்தார். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இந்த வழக்கில் சிறுமிக்காக வாதாட மிகச்சிறந்த வக்கீல்களை அரசு நியமிக்கும் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று சிறுமியை பார்த்தபின், சிறுமியின் உடல், தலை என அனைத்து இடங்களிலும் பலத்த காயம் இருப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் இந்த வழக்கில் இன்னும் யாரும் கைது செய்யப்படாததை கண்டித்தார்.