பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கோவையில் உள்ள பண்ணைகளில் சோதனை

கோவை: கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமடைவதை தொடர்ந்து தமிழகத்திலும் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்ணையில் நூற்றுக்கணக்கான வாத்துக்கள் மற்றும் கோழிகள் திடீரென உயிரிழந்தது.

இதையடுத்து இதற்கான காரணம் பற்றி ஆய்வு செய்கையில், இறந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டது. திருவனந்தபுரத்தை தொடர்ந்து கேரளாவின் கோட்டயம் பகுதிகளிலும் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இப்பாதிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசாங்கம் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள சுமார் 1,206 பண்ணைகளில் முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பண்ணையில் இருக்கும் பறவைகள் மர்மமான முறையில் இறந்தால், கால்நடை பராமரிப்பு துறையினருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒருமுறை பறவை காய்ச்சல் ஏற்பட்டால் அதன் பாதிப்பு 6 மாதங்களுக்கு இருக்கும்.