சட்டசபை பொதுத்தேர்தல் ஆயத்தப் பணிகள்- குமரி கலெக்டர் ஆய்வு

2021-ல் சட்டசபை பொதுத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வாக்குப்பதிவு சம்பந்தப்பட்ட எந்திரங்கள் கண்டெய்னர் லாரிகளில் எடுத்து வரப்பட்டு பூதப்பாண்டியில் உள்ள தாலுகா அலுவலக குடோனில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்கள் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக நேற்று இறச்சகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கல்லூரியை மாவட்ட கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு தரைதளம், மேல் தளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் அதிகாரி, நாகர்கோவில் கோட்டாட்சியர், துணை சூப்பிரண்டு, அகஸ்தீஸ்வரம் தாலுகா தாசில்தார், தோவாளை தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், தேர்தல் பிரிவு தனி தாசில்தார், தோவாளை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரோகினி கல்லூரியிலும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சட்டசபை பொதுத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.