இணைய தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு

வேலூர்: விழிப்புணர்வு நிகழ்ச்சி... வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் இன்று இணையதளத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மலர், பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் சுசிதா முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு பாகாயம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமை வகித்து பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் செல்போன், இணையதள சேவைகள் இன்றியமையாததாக உள்ளது. மாணவர்கள் தங்கள் கல்வி விஷயங்களுக்கு இணையதளத்தை பயன்படுத்த வேண்டும்.

பலர் படிக்கும் நேரத்திற்கு வெளியே செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். செல்போன் மற்றும் இணையத்தை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து, அவர்களை தவறாக சித்தரித்து, பணம் கேட்டு வழிப்பறி செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே இணையதளத்தை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதையடுத்து, சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் சசிகலா மற்றும் சுமதி ஆகியோர் சமூக வலைதளங்களில் தவறான நபர்கள் எப்படி மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பேராசிரியர்கள் தமிழ்செல்வம், மோகனா மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.