சாலைகளில் படுமோசமான நிலை... அங்கப்பிரதட்சணம் செய்த போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்

கர்நாடகா: சாலையில் அங்கப்பிரதட்சண போராட்டம்... கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, ஏற்கனவே மோசமாக இருந்த சாலைகள் படுமோசமானதால் மக்கள்படும் துயரைக் களைய, சமூக ஆர்வலர் நித்யானந்தா ஒலக்காடு, சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெங்களூரு நகரமே வெள்ளக்காடான நிலையில், சட்டத்துக்கு விரோதமாக, கால்வாய்களை மறித்து, ஆக்ரமித்துக் கட்டப்பட்ட கட்டங்களுக்கு எதிராக கர்நாடக அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், உடுப்பி சாலைகள் மிக மோசமாக இருப்பதை சுட்டிக்காட்டி, உடனடியாக சாலை அமைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர் நித்யானந்தா ஒலக்காடு என்பவர், உடுப்பி சாலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

காவி உடை அணிந்து கொண்டு, அந்த மேடுபள்ளமான சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்த நித்யானந்தா, தனது பூஜை நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில், அந்த சாலையிலேயே சிதறு தேங்காயும் உடைத்தார்.

சாலைகள் மோசமாக இருப்பதை எதிர்த்து போராட நினைத்த நித்யானந்தா, வித்தியாசமான முறையில் போராடி, அரசு மற்றும் அரசு நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு செய்ததாகக் கூறினார். இந்தச் சாலை வழியாக கர்நாடக முதல்வர் பொம்மை பல முறை பயணித்தும் கூட, இது இப்படியே இருப்பதாக அங்கிருக்கும் மக்கள் கூறுகிறார்கள்.

கர்நாடகத்தில் மோசமான சாலைகளுக்கு எதிராக மக்கள் விதவிதமாக போராடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.