குட்டிகளுடன் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட கரடிகள்

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி கிடந்தோம். இப்போது குட்டியுடன் முகாமிட்டுள்ள கரடிகளால் முடங்கி கிடக்கிறோம் என்று வேதனை தெரிவிக்கின்றனர் கோத்தகிரி கடைகம்பட்டி குடியிருப்பு பகுதி மக்கள்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கடைகம்பட்டி பகுதியில், நீர் ஓடையை ஒட்டி, புதர் மற்றும் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளதால், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, கிராம குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் நுழைந்த கரடிகள், அதே இடத்தில் முகாமிட்டுள்ளன. அதிகாலையில் தண்ணீர் பிடிக்க சென்ற பெண்கள், கரடிகளை கண்டு அச்சமடைந்து, தலைத் தெறிக்க ஓட்டம் பிடித்து வீட்டுக்குள் முடங்கினர்.

இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். சில நேரத்தில் கரடியின் சத்தம் கேட்பதால் அது இன்னும் கிராமத்திலேயே முகாமிட்டுள்ளது என்று அச்சம் தெரிவிக்கும் கிராம மக்கள், 'கரடிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன், கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கவேண்டும்' என, வனத்துறையை வலியுறுத்தியுள்ளனர்.