வயநாடு மக்களுடனான எனது உறவை பாஜகவால் ஒரு போதும் பிரிக்க முடியாது... ராகுல்காந்தி சூளுரை

வயநாடு: யாராலும் பிரிக்க முடியாது... எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தாலும், வயநாடு மக்களுடனான தனது உறவை பாஜகவால் ஒரு போதும் பிரிக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

மோடியின் பெயரை அவதூறாகப் பேசியதற்காக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ராகுல் காந்தி முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு சென்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் திறந்த வாகனத்தில் பேரணியாக புறப்பட்டார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ஒட்டுமொத்த அரசும் கெளதம் அதானியை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

இதனை எதிர்த்து ராகுல் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், அவரை தகுதி நீக்கம் செய்ததாக பிரியங்கா விமர்சித்தார். இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, எம்.பி என்பது வெறும் அடையாளம் தான் என்று கூறினார். தனது பதவி, வீடு ஆகியவற்றை பறித்து, பாஜக அரசால் தன்னை சிறைக்கு கூட அனுப்ப முடியும். ஆனால், வயநாடு மக்களின் பிரதிநிதி என்பதை அவர்களால் ஒரு போதும் தடுக்க முடியாது.

போலீசாரை தனது வீட்டிற்கு அனுப்பி அச்சத்தை ஏற்படுத்தலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால், தான் ஒருபோதும் பயப்பட மாட்டேன். பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். பாஜக தன்னை தொடர்ந்து கண்காணித்து, நடவடிக்கை எடுத்து வருவதே, தான் சரியான பாதையில் செல்வதற்கு சான்று. இவ்வாறு அவர் கூறினார்.