உத்தர பிரதேசத்தில் பாஜக தலைவரை சுட்டுக் கொலை - 2 பேரிடம் விசாரணை

உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் மண்டல பாஜக தலைவராக டி.கே.குப்தா இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு குப்தா தனக்கு சொந்தமான கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.அப்போது பைக்கில் வந்த நபர்கள் திடீரென குப்தாவை துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதனால் பலத்த காயமடைந்த குப்தாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை பிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் பகை காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள துண்ட்லா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக குப்தா பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், அவர் கொல்லப்பட்டது அவரது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.