காஷ்மீர் முன்னாள் முதல்வர் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

ஜம்மு: காவி கொடியை தேசியக் கொடியாக மத்திய அரசு விரைவில் மாற்றும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமர்சித்தார். இதற்கு கடும் கண்டனங்களை பாஜ தெரிவித்துள்ளது.

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி பாஜகவை விமர்சித்து வருகிறார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசை மெகபூபா முப்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மெகபூபா முப்தி, மூவர்ணக் கொடியை, காவி கொடியை தேசியக் கொடியாக மத்திய அரசு விரைவில் மாற்றும் என விமர்சித்தார். இந்நிலையில் மெகபூபா முப்தியின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாகூர் கூறியதாவது:- பாஜகவின் மந்திரம் தேசம் முதல், கட்சி இரண்டாவது, சுயநலம் மூன்றாவது. மெகபூபா முப்தி மீண்டும் பகல் கனவு காண்கிறார்.

மூவர்ணக் கொடி இந்த தேசத்தின் பெருமை. எனவே, பாஜக தேசியக் கொடியை மாற்றப் போவதாகக் கூறுவது அறிவீனமான கருத்து என்று தெரிவித்துள்ளார்.