தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை 2020-21-ம் ஆண்டு வழங்குவதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி 2019-20-ம் ஆண்டில் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

அதுபோல டாஸ்மாக் நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிரந்தர ஊழியர்கள் மற்றும் வேறு வாரியம், கழகம் அல்லது அரசுத் துறையில் இருந்து மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் 10 சதவீத போனஸ் தொகையை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போனஸ் வழங்குவதற்கான ஊழியர்களை தேர்வு செய்யும்போது, அவர்கள் வேலையில் சேர்ந்த தேதி கணக்கில் எடுக்கப்பட வேண்டும். முறைகேடுகள் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், பயிற்சியில் இருப்பவர்களுக்கு போனஸ் கிடையாது. கண்காணிப்பாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் களுக்கு அதிகபட்சம் ரூ.8,400 போனஸ் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.