பிரிட்டன் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி வட்டி விகித உயர்வு

பிரிட்டன்: மீண்டும் உயர்ந்த வட்டி விகிதம்... பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் இங்கிலாந்து மத்திய வங்கி மீண்டும் ஒருமுறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

அறிவிக்கபட்ட இந்த உயர்வு கடந்த 14 ஆண்டுகளின் உயர்ந்த நிலையெனக் கூறப்படுகிறது. பிரித்தானியாவின் பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றுவிட்ட நிலையில் வாழ்க்கைச் செலவீனத்துடன் பலர் போராடும் நிலையில் வீட்டு உரிமையாளர்களுக்கும் வீட்டு அடமானக் கடன் பெற்றவர்களுக்கும் புதிய பாதக செய்தியை இங்கிலாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரை 3 வீதத்தில் இருந்த வட்டிவீதம் தற்போது 3.5 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இது ஒன்பதாவது முறையான வட்டி வீத உயர்வாகும். இந்த உயர்வு காரணமாக வங்கிகள் சேமிப்பாளர்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கினாலும், வீட்டு அடமானக் கடன் பெற்றவர்களுக்குரிய கடன் வட்டிவீதமும் அதிகரிக்கும் என்பது பாதகமாகும்.

உணவு மற்றும் எரிசக்தி கட்டணங்கள் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், அதிகரித்துச்செல்லும் விலைவாசி உயர்வைத் தணிக்கும் முயற்சியின் ஒருகட்டமாகவே இங்கிலாந்து மத்திய வங்கி மீண்டும் ஒருமுறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.