சர்க்கரை வரியை ரத்து செய்ய பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் திட்டம்

பிரிட்டன்: சர்க்கரை வரியை ரத்து செய்ய திட்டம்... பிரித்தானிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ் தனது முதல் பணியாக சர்க்கரை வரியை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குளிர்பானங்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக விதிக்கப்பட்டுள்ள சர்க்கரை வரி ரத்து செய்யப்பட்டால் குளிர்பான நிறுவனங்கள் மகிழ்ச்சி அடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் எடுக்கப்போகும் இந்த முதல் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் வாழ்க்கை செலவு நெருக்கடியை தணிக்க பிரதமர் லிஸ் ட்ரஸ் குளிர்பானங்கள் மீதான சர்க்கரை வரிகளை ரத்து செய்யவும், நாட்டின் வாழ்க்கை செலவு நெருக்கடியை தணிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிடவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடல் பருமன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய பிரித்தானிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங், சுகாதார அதிகாரிகளுக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமரின் இந்த நடவடிக்கை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் குளிர்பானங்கள் மீதான சர்க்கரை வரி அமலுக்கு வந்தது. இந்த வரி மில்லியன் கணக்கான குழந்தைகளின் உடல் பருமனை சமாளிக்க உதவுவதை நோக்கமாக கொண்டதாக கூறப்பட்டது.

குளிர்பான உற்பத்தியாளர்கள் தாங்கள் விற்கும் குளிர்பானத்தில் சர்க்கரை அதிகம் சேர்த்தால் அந்த பானங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. சர்க்கரை வரி என்பது 100 மில்லிக்கு 8 கிராம் சர்க்கரைக்கு மேல் உள்ள பானங்கள் லிட்டருக்கு 24 சதம் வரி செலுத்த வேண்டும். 100 மில்லிக்கு 5 கிராம் - 8 கிராம் சர்க்கரை இருந்தால் லிட்டருக்கு 18 சதம் வரி செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் சர்க்கரை சேர்க்கப்படாத தூய பழச்சாறுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல் பால் மற்றும் கால்சியம் கலந்த பானங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த வரிவிதிப்பு காரணமாக முன்னணி குளிர்பான நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பானங்களின் சர்க்கரை அளவை குறைக்க தொடங்கியது.


அதேசமயம் குளிர்பானங்களில் சர்க்கரை குறைந்ததால் உடல் பருமன், புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள், மூட்டுவலி மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் குறைந்ததாகவும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.