மகாராஷ்டிராவில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து!

மகாராஷ்டிராவில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்து தொடங்கப்படுவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) தனது சேவையை நிறுத்தியது. ஆனாலும் ஊரடங்கால் சிக்கி தவித்த தொழிலாளர்கள் ஊர் திரும்பும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஊரடங்கு தளர்வு காரணமாக அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து கடந்த மே 22-ந் தேதி முதல் எம்.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்தநிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வாக மாவட்டங்களுக்கு இடையே இன்று(வியாழக்கிழமை) முதல் பஸ் போக்குவரத்தை தொடங்க எம்.எஸ்.ஆர்.டி.சி. முடிவு செய்துள்ளது.

இது குறித்து அதன் நிர்வாக இயக்குனரும், துணை தலைவருமான சேகர் சன்னே கூறியதாவது:- மாவட்டங்களுக்கு இடையே எம்.எஸ்.ஆர்.டி.சி. பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி பஸ் சேவையை இன்று முதல் மீண்டும் தொடங்க திட்டமிட்டு உள்ளோம் என்று கூறியுள்ளார்.

பஸ் போக்குவரத்து தொடங்கும் நிலையில் அரசின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளதாவது:- பயணிகள் இ-பாஸ் எடுக்க தேவையில்லை. வேறு எந்த அனுமதியும் பெற வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் கொரோனா பரவல் தடுப்புக்காக எடுக்க வேண்டிய விதிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும். முகக்கவசம் கட்டாயம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு பஸ்சிலும் 22 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.