பதிவு கட்டணம் செலுத்தினால் அரசு வேலை பெற முடியுமா -உண்மை பின்னணி என்ன?

கலால் துறை சார்பில் வெளியிடப்பட்டதாக கூறும் வேலைவாய்ப்பு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வைரல் பதிவுகளில் அரசு சார்பில் வெளியிடப்பட்டது போன்று காட்சியளிக்கும் அறிக்கையில் ரூ. 2200 பதிவு கட்டணம் செலுத்தினால் வேலையில் சேரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கலால் துறையில் பணியாற்ற விரும்புவோர் ரூ. 2200 பதிவு கட்டணம் செலுத்தலாம் என கூறும் தகவல் மற்றும் பணியில் சேர்வதற்கான நியமன உத்தரவு ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, மத்திய கலால் துறை இதுபோன்ற அறிக்கையை வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் நியமன உத்தரவில் லோகோ மற்றும் கையெழுத்து இடம்பெற்று இருந்ததால் நெட்டிசன்கள் இது உண்மை என நினைத்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், கலால் துறையில் காலி பணியிடம் இருப்பதாக கூறும் தகவல் மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்தி பணியில் சேரலாம் என்ற தகவலில் துளியும் உண்மையில்லை என்பது தெரிய வந்துவிட்டது

அதன்படி, விண்ணப்ப கட்டணம் செலுத்தி யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில சமயம் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.