முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் .. தமிழ் வழி சான்றிதழ்களை 27-ம் தேதி வரை பதிவேற்றலாம்

சென்னை: முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் சிலர், தமிழ் வழியில் படித்ததற்கான கல்வித்தகுதி ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே இதனையடுத்து தமிழ் வழி படித்ததற்கான ஆவணங்களை ஆக.22 முதல் 25-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது தொழில்நுட்ப காரணங்களால் சான்றிதழ்களை (ஆக.24) முதல் 27-ம் தேதி வரை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு 11-12ம் வகுப்பு, டிப்ளமோ படிப்பு, இளங்கலைப் பட்டம் (UG Degree),

மேலும் முதுகலைப் பட்டம் (PG Degree) கல்வியியல் இளங்கலைப் பட்டம் (B.Ed. Degree) மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (B.Ed. Degree மற்றும் MPEd. Degree) என தாங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான அனைத்து ஆவணங்களையும் உரிய அலுவலரின் ஒப்புதல் பெற்று அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பத்தில் ஏற்கனவே, தமிழ் வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை ‘ஆம்’ என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும். எனவே, மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இந்த விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.