போலீஸ் நிலையத்தில் கங்கனா மீது வழக்குப்பதிவு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தி பட உலகில் போதை புழக்கம் உள்ளதாகவும் முன்னணி நடிகர்கள் இதை பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார் சொல்லி வரும் நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் பற்றியும் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

தனது டுவிட்டர் பக்கத்தில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்தவர்கள்தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கின்றனர். இந்த சட்டங்களை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

கர்நாடகத்தை சேர்ந்த வக்கீல் ரமேஷ் நாயக் தும்கூரு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விவசாயிகளை புண்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து தெரிவித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்ற நீதிமன்றம் கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கியாதசந்திரா போலீஸ் நிலையத்தில் கங்கனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.