சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை இன்று முதல் தொடக்கம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று முதல் சிபிஐ விசாரணையை தொடங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் தந்தை ஜெயராஜ் 63, மகன் பென்னிக்ஸ் 31, கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ., விசாரணையை துவக்குவதாக, மத்திய அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் தாக்குதலில் சாத்தான்குளம் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரிக்கிறது. ஜூன் 30ல் தமிழக அரசு தரப்பில், வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது குறித்த அரசாணை சமர்ப்பிக்கப்பட்டது.

நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு காணொலியில் விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பில், 'சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கீழமை நீதிமன்றத்தில் மனு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத் தரப்பில்,' சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிந்துள்ளது. சி.பி.ஐ., கூடுதல் எஸ்.பி., சுக்லா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டில்லியிலிருந்து இன்று (ஜூலை 10) தமிழகம் வந்து விசாரணையை துவக்குகிறது,'என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், 'சி.பி.ஐ.,விசாரணைக்குத் தேவையான உதவிகள் செய்யத் தயார்,' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தெரிவித்ததாவது:

சி.பி.சி.ஐ.டி., சேகரித்த ஆதாரங்கள், ஆவணங்களை சி.பி.ஐ., பயன்படுத்திக் கொள்ளலாம். கைதானவர்களில், அவசியம் கருதி தேவையானவர்களை மட்டும் உரிய காலத்திற்குள் போலீஸ் காவலில் எடுக்க சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் சி.பி.ஐ., மற்றும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.சி.ஐ.டி.,தரப்பில் 'சீல்' இட்ட உறையில் வைத்து ஜூலை 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர். சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்க மதுரை வரும் சி.பி.ஐ., குழு ஜவஹர்புரத்தில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறது. பிறகு சாத்தான்குளம் செல்ல உள்ளனர்.