18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக ‘கோர்பவேக்ஸ்’ தடுப்பூசிக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல்

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோர்பவேக்ஸ் தடுப்பூசி தற்போது 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு போடப்பட்டு கொண்டு வருகிறது. இத்தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக பயன்படுத்துவதற்கு ஆய்வுகள் நடந்து வந்தன.

எனவே அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த கடந்த ஜூன் 4-ந் தேதி மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல் வழங்கினார். இதனைத்தொடர்ந்து நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கொரோனா பணிக்குழுவும், இந்த தடுப்பூசியை பெரியவர்களுக்கு பயன்படுத்துமாறு மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரைத்தது.

இதையடுத்து இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. இதன் மூலம் கோர்பவேக்ஸ் தடுப்பூசி பெரியவர்களுக்கு பூஸ்டர் டோசாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு விரைவில் வழங்குகிறது. அவ்வாறு ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

மேலும் முதல் 2 டோசாக கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் போட்டுக்கொண்ட அனைவரும் கோர்பவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோசாக போட்டுக்கொள்ளலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.