கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் சென்னை

புரெவி புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.

சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சில பகுதிகளில் மழை நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் வடியாமல் அப்படியே குளம் போல தேங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காலை முதலே கனமழை பெய்கிறது. இதனால் சாலைகள் மீண்டும் வெள்ளக்காடாக மாறின. சில சாலைகள் குளம் போன்று காட்சியளிக்கின்றன. வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. சில இடங்களில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.