கர்நாடகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு அரசின் மிகப்பெரிய ஊழலே காரணம் - சித்தராமையா குற்றச்சாட்டு

கொரோனா பரவலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. நமது நாட்டில் மராட்டியம் முதல் இடத்திலும், கர்நாடகம் 3-வது இடத்திலும் உள்ளது. கர்நாடகத்தில் தினமும் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 100 பேர் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. 1.16 லட்சம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அதிகரிப்புக்கு பொதுமக்களே காரணம் என்ற ரீதியில் எடியூரப்பா பேசுகிறார். இதன் மூலம் அவர் தனது அரசின் தவறுகளை மூடிமறைக்க முயற்சி செய்வது வெட்கக்கேடானது. தனது கஜானாவை நிரப்பிக்கொள்ள இந்த அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. மதுக்கடைகள் முதல் வணிக வளாகங்கள் வரை அனைத்தையும் திறந்துவிட்டு, மக்களை கைவீசி அழைக்கிறது. இவ்வாறு செய்துவிட்டு, மக்கள் மீது பழி போடுவது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும் என கூறியுள்ளார்.

மேலும் அவர், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல அவர்களிடம் பணம் இல்லை. அதனால் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறார்கள். கர்நாடகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு மாநில அரசின் மிகப்பெரிய ஊழலே காரணம். கொரோனா பாதித்த மக்களுக்கு சேவையாற்ற இது ஒரு தருணம் என்று கருதாத எடியூரப்பாவின் மந்திரிசபை, பணம் கொள்ளையடிக்க இது சரியான நேரம் என்று கருதியதே இன்றைய மோசமான நிலைக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலத்தில் 841 பேர் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை சொல்கிறது. ஆனால் பெங்களூரு மாநகராட்சி, தனது எல்லைக்குள் 957 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்கிறது. மாநில அரசு தனது தோல்விகளை மூடிமறைக்க பொய் சொல்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவை இல்லை. புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகள் எத்தனை? என்பதை முதல்-மந்திரி தெரியப்படுத்துவாரா? என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.