முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா இல்லை; பரிசோதனை முடிவு குறித்து அமைச்சர் தகவல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நெகட்டிவ் முடிவுகள் வந்தன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கண்ணுக்கு தெரியாத வைரஸை எதிர்த்து களத்தில் நின்று முன்கள பணியாளர்கள் போராடி வருகின்றனர். கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தமிழக அரசின் வியூகமாகும். ஐசிஎம்ஆர் அனுமதியுடன் 87 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. அதன்மூலம் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை எட்டியுள்ளோம்.

இதுவரை மொத்தம் 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 1,358 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 32,754 ல் இருந்து 34,112 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 55 சதவீதமாக உள்ளது.

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரியால் ஏற்பட்டுள்ள பேரிடரை கணிக்க வல்லுநர்கள் திணறும் நிலை உள்ளது. கடவுளுக்கு தான் தெரியும் என முதல்வர் கூறியது யதார்த்தமானது.

அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டக்கூடாது. எந்த ஆக்கப்பூர்வமான தகவல்களை கூறினாலும் அரசு கேட்க தயாராக உள்ளது. பாதிப்புகள் இரட்டிப்பாக 15 நாட்களுக்கு மேல் உள்ளது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளது. முதல்வர் இபிஎஸ் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

பரிசோதனை முடிவில் நெகடிவ் வந்தது. சென்னை மருத்துவக் கல்லூரி டீன், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா பாதிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக வெளியிட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.