மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து இன்று கொண்டார். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.123.53 கோடி மதிப்பீட்டில் 86 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். நான் முதலமைச்சரான பிறகு தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 1900 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன.

ஸ்டாலினுக்கு நாள்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கம் வரும். தமிழகம் முதலிடத்தில் இருப்பதை பொறுக்க முடியாமல் ரூமில் உட்கார்ந்து ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம்.

தமிழக அரசு மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனோடு செயல்பட வேண்டும்; அரசியலோடு செயல்படக்கூடாது.

கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.