செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி தேர்வுகளை நடத்துவது கடினம்; ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,829 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல கல்லூரிகள் தனிமைபடுத்தல் மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. மேலும், செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பதை மாநில அரசுகளே தீர்மானிக்க அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.