மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை .. முதல்வர் முக ஸ்டாலின் ஆசிரியர் தினத்தன்று தொடங்கி வைக்க உள்ளார்

சென்னை: தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளி படிப்போடு நிறுத்தி விட கூடாது என்பதற்காகவும் கல்லூரிகளில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கிலும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை அரசு மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்வி உதவி திட்டமாக அரசு மாற்றியுள்ளது.

இதை அடுத்து கடந்த முறை நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது தமிழக நிதியமைச்சர் 6 – 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்தார்.

எனவே இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இத்திட்டத்தை செயல்படுத்த அரசு தேவையான ஏற்பாடுகளை பல செய்ய தொடங்கியது. மேலும் வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது. அதில் இத்திட்டத்தை முழுமையாக ஆன்லைன் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும்.

மேலும் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதியில் வங்கி கணக்கில் ரூ. 1000 உதவித் தொகையை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அளவில் திட்ட நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2022 – 2023 ம் கல்வியாண்டில் 93,000 மாணவிகள் பயன் பெற உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்த திட்டத்தை ஆசிரியர் தினத்தன்று (செப்.5) வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார்.