புதுச்சேரி கொரோனா பரிசோதனையில் முதல் இடத்தில் உள்ளது; முதல்வர் நாராயணசாமி

கொரோனா பரிசோதனையில் புதுச்சேரி முதல் இடத்தில் உள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் வர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறப்பு ஏதும் இல்லை. இதுவரை சுமார் 3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது சோதனை 20 சதவீதத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரிசோதனையில் புதுச்சேரி முதல் இடத்தில் உள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக 95 சதவீத பணிகளை அனுமதித்துள்ளோம். தமிழக பகுதிகளுக்குள் பஸ்களை இயக்க அனுமதி கேட்டு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

மத்திய அரசு விரைவில் அடுத்தகட்ட தளர்வினை அறிவிக்க உள்ளது. அடுத்து தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக நாங்களும் மருத்துவ வல்லுனர்களை அழைத்துப் பேச உள்ளோம். ஜிப்மர் சர்வேயில் புதுவையில் 25 சதவீதம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே புதுவையில் இனிமேலும் தொற்று பாதிப்பு அதிகரிக்குமா? என்பது குறித்து மருத்துவ வல்லுனர்களிடம் கருத்து கேட்க உள்ளோம். அதன்பின் தளர்வுகள் குறித்து முடிவு எடுப்போம்.

உலக சுகாதார அமைப்பு மறுபடியும் கொரோனா தாக்கம் இருக்கும் என்று எச்சரித்துள்ளது. வெளிநாடுகளில் அதேபோல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மூட்டுவலி, இருதய பாதிப்பு உள்ளிட்டவை வருகிறது. எனவே பின்விளைவுகள் குறித்து ஆராயவும் மருத்துவர்களை கேட்டுள்ளோம். கொரோனா பாதித்து குணமானவர்களும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.